Friday, March 9, 2018

செவிலியர்களின் உழைப்பை சுரண்டாதே! குறைந்தபட்சம் ரூ 20000/- வழங்க வேண்டும்! கோரிக்கை வைக்கும் MP!


09/03/2018 12:29:07 
தமிழக அரசு நிர்ணயித்துள்ள  ஊதிய விகிதம் உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஊதியத்தை விட மிகவும் குறைவாக உள்ளது. குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையானது,
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,824 நிர்ணயித்து தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, தமிழக அரசு நிர்ணயித்துள்ள  ஊதிய விகிதம் உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஊதியத்தை விட மிகவும் குறைவாக உள்ளது.இது  செவிலியர்களின் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால், இது மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாகும். செவிலியர் ஊதியம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களுக்கான ஊதிய விகிதங்கள் குறித்து பரிந்துரைக்கவும் வல்லுனர் குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது.  அதன்படி அரசு அமைத்த வல்லுனர் குழு 50 படுக்கைகளுக்கு குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். 50 முதல் 100 படுக்கை வரை உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு செவிலியருக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 25% குறைவாகவும், 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனை செவிலியர்களுக்கு 10% குறைவாகவும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இந்த பரிந்துரையை நிறைவேற்றும்படி மாநில அரசுகளுக்கு 2016-&ஆம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஆணையிட்டிருந்தது.
ஆனால், அனைத்து நிலைகளிலுமே உச்சநீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு பரிந்துரைத்த ஊதியத்தை விட மாநில அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. மத்திய அரசின் பரிந்துரையை விட குறைந்தபட்சம் 21 விழுக்காடு முதல் அதிகபட்சமாக 50% வரை ஊதிய விதிதம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அறப்போராட்டங்களின் மூலமாகவும், சட்டப்போராட்டங்களின் மூலமாகவும் செவிலியர்கள் போராடிப் பெற்ற இவ்வுரிமையை தனியார் மருத்துவமனைகளுக்கு சாதகமாக தமிழக அரசு சிதைத்து விடக் கூடாது.
 மருத்துவ சேவைத் துறையில் செவிலியர்களின் பணி மகத்தானது ஆகும். நோயாளிகளை கனிவுடன் கவனித்துக் கொள்வதில் தொடங்கி, அவர்களின் சொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணி செய்வது வரை அவர்களின் தியாகங்கள் அளவிட முடியாதவையாகும்.  அதற்கேற்றவாறு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டுமே தவிர, உழைப்பை சுரண்டக்கூடாது.
எனவே, மத்திய அரசு பரிந்துரைத்தவாறு செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20,000 வழங்க வேண்டும். 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இதற்கேற்றவாறு அரசாணையில் திருத்தம் செய்வதுடன், அது முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

செவிலியர்களின் மீதான உழைப்புச் சுரண்டல்கள் தனியார் துறையில் மட்டுமின்றி, அரசுத்துறையிலும்  ஒழிக்கப்பட வேண்டும். தனியார் துறையில் செவிலியர்களின் உழைப்பு ரூ.6000 ஊதியம் கொடுத்து சுரண்டப்பட்டால், அரசு மருத்துவமனைகளின் ரூ.7000 கொடுத்து சுரண்டப்படுகிறது. இதற்கும் முடிவு காணும் வகையில் அரசுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த  செவிலியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Thanks To செய்தி புனல்

No comments:

Post a Comment

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...